Thursday, September 18, 2008

மீண்டும்..மீண்டும்..கரடி

ங்குச்சந்தையில் கரடிப்பிடி இறுகி வருகிறது. காரணம் அமெரிக்கா.

கடந்தாண்டு துவக்கத்திலேயே சப்ப்ரைம் சர்ச்சை துவங்கியது. அதன் இழப்பு அடுத்தடுத்த ஆண்டுகளில்தான் தெரியவரும் என்று நிபுணர்கள் கூறினர். உண்மையாயிற்று. அடுத்தது யார் என்று அமெரிக்கர் ஒவ்வொருவரும் பேசிவருவது புதிய ஜனாதிபதி பற்றியல்ல, புதிதாக திவாலாகும் நிறுவனம் எது என்பதைத்தான்.

பியர் ஸ்டர்னைத் தொடர்ந்து லீமன் பிரதர்ஸ், மெரில் லிஞ்ச், பிரடரி மேக், வாஷிங்டன் மியூச்சுவல், பென்னி மே, ஏஐஜி இன்சூரன்ஸ் என்று நிதிச்சிக்கலில் மூழ்கிய நிறுவனங்களின் பட்டியல் தொடர்கிறது.

அமெரிக்காவில் முதலீட்டு வங்கிகள் என்று தனிவங்கிகள் உள்ளன. ஒரு விதை நட்டு பல விதை பெறுவது அவற்றின் தொழில். ரிஸ்க்கான துறைகளில் முதலீடு செய்யும், ரிஸ்க்கான நபர்களை தேடி நிலம்வாங்க, வீடுகட்ட, சொகுசு பொருட்கள் வாங்க கடன்தரும்.

இக்கடன்களுக்காக பெறப்பட்ட உத்தரவாதம், பிணையம் ஆகியவற்றை சொத்தாக கருதும். அதன்பேரில் கடன் பத்திரங்கள் வெளியிட்டு பணம் திரட்டி மேலும் இதுபோன்ற கடன்களை வழங்கும். பலநாடுகளில் பணம் பெருகும் துறைகளில் முதலீடு செய்யும்.

ரியல்எஸ்டேட் துறையின் சரிவு, பொருளாதார மந்தம் முதலீட்டு வங்கிகளை சப் ப்ரைம் சுனாமியாக தாக்கி திவாலாக்கியுள்ளது.

158ஆண்டு பாரம்பரியமிக்க லிமென் பிரதர்ஸ் உலகப்போர், செப்.11 நிகழ்வுகளுக்கெல்லாம் தாக்குப்பிடித்து தற்போது குடைசாய்ந்துள்ளது.

இந்தியாவில் ஆனந்த்ராஜ் இண்டஸ்ட்ரிஸ், எடில்வைஸ் கேப்பிட்டல், ஸ்பைஸ் கம்யூனிகேசன், ஆர்பிட் கார்ப்பரேசன், ஐவிஆர்சிஎல் இன்ப்ரா ஸ்ட்ரக்சர் உள்ளிட்ட 16நிறுவனங்களில் லிமென் முதலீடு செய்துள்ளது.

மெரில் லிஞ்ச் வங்கி பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, யுனைடெட் ஸ்ப்ரிட், ஏபிபி, டிவிஸ் லேப் உள்ளிட்ட சுமார் நூறு நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.

இந்நிறுவனங்களின் திவால் அறிவிப்பும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து வெளியேற துவங்கியதும் இந்திய பங்குச்சந்தையை கரடிப்பிடியில் இறுக வைத்துள்ளது.

லிமன் பிரதர்ஸ் நிறுவனத்தை வாங்க ஐரோப்பிய நிறுவனம் பார்க்லே முன்வந்துள்ளது. மெரில் லிஞ்ச் மீது பேங்க் ஆப் அமெரிக்கா ஆர்வம் கொண்டுள்ளது. அமெரிக்க இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 8.5பில்லியன் டாலர் வழங்க அரசு முன்வந்துள்ளது. இதனால் இந்திய முதலீட்டாளர்கள் மூச்சுவிட்டுக்கொள்ளலாம்.

நேற்று ஏமன் அமெரிக்க தூதரகத்தின் மீது நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து தங்கம், வெள்ளி வர்த்தகத்தில் விலையேற் றம் வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சமர்த்தாக இருந்து புல்லியன் சந்தையில் ஏற்பட்ட ஏற்றம் கவனிக்கத்தக்கது.

No comments: