Sunday, November 23, 2008

ஆசை..ஆசை!

மிழக தொழில் சாம்ராஜ்யத்தில் ராமர் சகோதரர்களாக மாறன் சகோதரர்கள். சன்நெட்வொர்க்கை நிறுவி ஆர்கானிக், இனார்கானிக் என்று மீடியா துறையில் தனித்தடம் பதித்து வருபவர்கள். இயல்பான தொழில்வளர்ச்சியான ஆர்கானிக் உதாரணம்&சன் டிவி, துவண்டதை வாங்கி துலக்கும் இனார்கானிக் உதாரணம்&தினகரன்.

தென்னகத்தில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட முதல் நிறுவனம் சன்நெட்வொர்க். முதலீட்டாளர்கள், சந்தை வல்லுநர்களிடம் இந்தியாவின் மீடியா துறையில் தன்னிகரில்லா தனியிடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை ஏற்படுத்திய நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு வந்துள்ளது சிக்கல்.

இந்தியாவிலுள்ள தொழில்குடும்பங்களில் சிக்கல் அவ்வப்போது ஏற்படுவது வழக்கமான ஒன்று. சமீபத்திய உதாரணம் ரிலையன்ஸ் சகோதரர்கள். அவர்களது பிரச்னை குடும்பத்தின் மூத்த உறுப்பினரான திருமதி.அம்பானியின் முன்னிலையில் பேசித்தீர்க்கப்பட்டு விட்டது. அதுபோன்ற வாய்ப்பு மாறன் சகோதரர்களுக்கு கிட்டவில்லை. தமிழக மீடியாவில் முதலிடம் வகித்துவருவதால் பிற மீடியாக்களின் புறக்கணிப்புக்குள்ளாகியும், தவறான தகவல்களால் மக்கள்மனதில் இவர்கள் குறித்த எதிர்மறை பிம்பம் உருவாக்கப்பட்டும் வருகிறது.

சன்நெட்வொர்க் என்பது மாறன் சகோதரர்களின் தொழில்நிறுவனம் மட்டுமல்ல. அது தமிழகத்தின் பெருமைக்குரிய நிறுவனம். அந்நிறுவனத்தில் நேரடி,மறைமுக வேலைவாய்ப்பு பெறுபவர்கள், பொருளாதார சுழற்சி, சமூகவளர்ச்சி ஆகியவற்றை கருத்தில்கொண்டு சிக்கல் சுமுகமாக தீர்க்கப்படவேண்டும்.

முரசொலி மாறனின் மனசாட்சியாக மாறன்சகோதரர்கள் உள்ளனர். இந்தியாவின் முர்டாக், போபர்ஸ் செல்வந்தர் பட்டியலில் இடம்பிடித்த முதல்தமிழர், அறிவியல்பூர்வமான தொழில் அணுகுமுறை கொண்டவர்.. இன்னபிற பாராட்டுக்குரியவர், தேடிவந்த அரசியல் பதவியை தம்பிக்கு கொடுத்தவர். எதிர்ப்பு அலைகளில் நீந்தினாலும் தொழிலில் நம்பர்.1 என்ற இலக்கு உரியவர் கலாநிதி மாறன்.

மந்திரிபதவி பறிக்கப்பட்டபோதும் மத்திய அரசுக்கு நம்பிக்கை வாக்களித்தார் தயாநிதிமாறன். அவரை தங்கள் பக்கம் இழுக்க நடந்த பிறமுயற்சிகளை தனது கொள்கைப்பற்றால் வெற்றிகொண்டார்.
ஈழத்தமிழர்களுக்காக தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்திகேட்டதும் தனது வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை ரத்துசெய்து சென்னை திரும்பி முதல்வரிடம் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்தார். கொட்டும்மழையில் சொட்டச்சொட்ட நனைந்து ஈழத்தமிழருக்கான மனிதச்சங்கிலியில் இணைத்துக்கொண்டார்.

ஸ்பெக்ட்ரம், தமிழக அரசுத்துறைகளின் குளறுபடிகள் குறித்து பிற மீடியாக்கள் துப்பறிந்தும், கேட்டவற்றுக்கு உருவம்கொடுத்தும் செய்திகள் தந்தபோது சன்குழுமம் நடுநிலை காக்க செய்திகள் வெளியிட்டுள்ளன.

பூமாலை துவங்கி சன்குழுமத்தின் வளர்ச்சியில் கலைஞரின் ஆசியும், ஆர்வமும் இருக்கும். அது எப்போதும் வேண்டும். கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என்ற திராவிடக்குதிரைகளை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டிற்கு பெயர்போன கட்சித்தேரில்பூட்டி தமிழக ராஜபாட்டைகளில் கலைஞரின் வெற்றிவலம் தொடரவேண்டும். அதற்கான பொறுப்பும்,கடமையும்,உரிமையும் அவருக்கு உண்டு.

மாசறு பொன்னான முரசொலி மாறனின் ஐந்தாமாண்டு நினைவுதினத்தில் கலைஞர் எடுக்கவேண்டிய உறுதிமொழி இதுவாக இருக்கவேண்டுமென்பதே ஆசை.

சன்டிவி பங்குகள் பட்டியலிடப்பட்ட காலத்தில் இருந்ததுபோன்ற விலைக்கு உயர்ந்து முதலீட்டாளர் முகங்களில் சூரியப்பிரகாசம் பரவவேண்டுமென்பதும் ஆசை.